Saturday, August 14, 2010

Srirangam Floods - 1977 Some remembrances

ஸ்ரீரங்கம் வெள்ளம் 1977- ஒரு சில நினைவுகள்
நவம்பர் 1977 ஒரு நாள் மதியம் எங்களது பள்ளிக்கு விடுமுறையா என ஞாபகம் இல்லை. நாங்கள் வீட்டில் இருந்தோம். அப்பா திருச்சி ஜங்ஷன்(Southern Railway Zonal Training Centre) ல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். காவிரியில் வெள்ளம் வரும் அபாயம் இருப்பதால் அவரது அலுவலகத்திற்கும் விடுமறை என மத்தியானமே திரும்பி வந்து விட்டார். வரும் பொழுது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதை கண்டார். வீட்டிற்க்கு வந்தவுடன் "எல்லாரும் கிளம்புங்க காவேரி ஆற்றை பார்க்க போலாம்" என்றவுடன் நான் எனது அம்மா மற்றும் இரண்டு அண்ணன்கள் எல்லோரும் வெகு ஆவலுடன் புறப்பட்டோம். நேராக ஒரு பஸ்ஸை பிடித்து மாம்பழ சாலை அருகே இறங்கி பழைய பாலத்திற்கு சென்றோம். காவிரியில் தான் வெள்ளம் என்றால், அதன் பாலத்திலும் வெள்ளம், அது மக்கள் வெள்ளம் . நாங்கள் சென்ற பொழுது ஒரு ரயில் (ரயில்வே பிரிஜ்ஜில்) சென்று கொண்டிருந்தது. ஆற்று நீரோ, பாலத்தின் ஒரு சில அடிகள் கீழே வரை வந்து விட்டது. அதை கண்ட உடன் என் தந்தை இப்பாலத்தில் செல்லும் ரயில் இது தான் கடைசியாக இருக்கும் ஏனென்றால் வெள்ளம் இன்னும் ஒரு அடி அதிகமானால் ரயில் பாலத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படும் (As per Rules) என்று கூறினார். பின்னர் அதை போலவே நடந்தது. வெள்ளம் (fury) அதிகமாவதை கண்டு நாங்கள் அங்கிருந்து அம்மா மண்டபம் வழியாக செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. 

வரும் வழியிலும் அங்கேயும் மிக அதிகமான கூட்டம். அம்மா மண்டபம வாயிலில் போலீஸ் காரர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தண்ணீரை கட்டுப்படுத்த மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். தண்ணீர் உள்ளே வந்து விட்டால் ஊரே வெள்ளக்காடகிவிடும் அல்லவா அதை எப்படியாவது தடுத்து விட பகீரதப் பிரயர்த்தனம் செய்து கொண்டிருந்தனர். மணல் மூட்டைகளையும் பெரிய பெரிய கற்களையும் வைத்து நீரை தடுக்கப பார்த்தனர். (But, I guess, they knew they were losing the game). அது ஒரு பக்கம் இருக்க இந்த பக்கத்தில் இருந்து மக்கள் வெள்ளம் அலை மோதியது - வெள்ளத்தையும் அதை எப்படி போலீஸ்காரர்கள் தடுக்கிறார்கள் என்பதையும் பார்க்க ஆவலுடன் கூட்டம் முண்டியடித்தது. அப்பொழுது கோபம் கொண்ட ஒரு போலீஸ்காரர் "போங்கம்மா/கப்பா இங்கே ஏன் வந்து தொந்தரவு கொடுக்கறீங்க, தண்ணிய தானே பார்க்கணும், கவலைபடாதீங்க உங்க வீடு தேடி காவேரி வரும் தயவு செய்து போயிடுங்க" என்று கோபத்துடனும், இயலாமையுடனும் கூறினார். (What a prophecy it was!) . சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு வீடு திரும்பினோம். ஊரெங்கும் காவேரி வெள்ளம் பற்றியே பேச்சாக இருந்தது. இரவில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. உணவருந்திவிட்டு உறங்க சென்றோம். 

இரவு ஒரு இரண்டு மணி இருக்கும் என ஞாபகம். பேச்சு சப்தமும் தண்ணீரின் சல சலப்பும் கேட்க எல்லோரும் விழித்துக்கொண்டோம். நாங்கள் அப்பொழுது மேல உத்திரை வீதியில்  வசித்து வந்தோம். வெளியில் வந்து பார்த்தால் காவேரி வீ(டு)தி தேடி வந்திருந்தாள். அம்மா மண்டப்பத்தில் அப் போலீஸ்காரர் கூறிய ஆருடம் பலித்து இருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் மொத்தம் 6 படிகள் உண்டு. அது வெள்ளம் வீட்டுக்குள் வருவதில் இருந்து காப்பாற்றியது. ஆனால் மற்ற பல வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டது. அடையவளஞ்சான் தெப்பக்குளம் உடைந்ததாக நினைவு. நாங்கள்  படித்த பள்ளியிலும் மிகுந்த சேதம். நூலகத்தின் பல புஸ்தகங்கள் வீணாகின. மூன்று, நான்கு வாரம் கழித்து தான் பள்ளிக்கு திரும்பிசென்றோம். தெருவுக்குள் drum மற்றும் tyre களால் ஆன boat ல் மக்கள் சென்ற காட்சி இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. 

எல்லாவற்றையும் விட வெள்ளம் எல்லாம் வடிந்த பின் ஊரில் கிளம்பிய புரளி பற்றி உங்கள் கூற வேண்டும். அதாவது மேட்டூர் உடைந்தது, பவானியும் உடைந்தது, ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர் வரை தண்ணீர் எட்டிவிடும், நம் எல்லோரும் மூழ்கிவிட வேண்டியதுதான் என சிலர் அச்சமூட்டினார்கள். இதை நம்பி சிலர் தங்கள் உடைமைகளை எடுத்துகொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தனர் (வீடு உயரத்தில் இருப்பதால் வெள்ளம் வராது என்ற நம்பிக்கை), அப்பா பழையபடி விடுமுறை அறிவிப்பால் மீண்டும் மதியமே வீட்டிற்கு வந்து விட்டார். காவிரியில் வெள்ளம் வடிந்து விட்டாலும், அப் பாலத்தின் மேலே வண்டியில் வரும் போது அது கரைபுரண்டு ஓடியதாக ஒரு பிரமை இருந்தது எனவும் ஆனால் எங்களை கண்டதும் தான் நிம்மதி திரும்பியது என கூறியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. இந்த வெள்ளம் பற்றி உங்கள் யாருக்கேனும் ஏதாவது சுவாரசியமான செய்தி இருந்தால் பதிவு செய்யவும். 

No comments:

Post a Comment